2019ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டமும், அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டம் என இம்மூன்று மாவட்டங்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதேபோல் கடைசி மூன்று இடங்களை வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் மாவட்டங்கள் பிடித்துள்ளன.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் என மொத்தமாக 95.02% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவிகள் 97% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மாணவர்கள் 93.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டங்கள் வாரியாக திருப்பூர் 98.53% கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தப்படியாக இராமநாதபுரம் 98.48% கொண்டு இரண்டாம் இடத்திலும் நாமக்கல் 98.45% கொண்டு மூன்றாம் இடத்திலும் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் 90.41%, திண்டுக்கல் மாவட்டம் 90.40%, வேலூர் மாவட்டம் 89.98% பெற்றுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.