சென்னையில் ரவுடி வெள்ளை பிரகாஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ். ரவுடியான இவர் காவல்துறையின் ஆவணங்களில் ஏ பிளஸ் பட்டியலில் இருந்து வந்தவர் ஆவார். இந்நிலையில் ரவுடி வெள்ளை பிரகாஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி வெள்ளை பிரகாஷ் ஆவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது கடந்த 3ஆம் தேதி (03.10.2024) தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குற்றப்பத்திரிக்கையில் இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாகப் பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாகச் சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர்.