உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வந்தடைந்த இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். அதன் படி நேற்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய தென்னக ரயில்வே போலீசார் லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி ரயில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ரயிலில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காயமடைந்த பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு விசாரணையை முடிப்பேன். அதே சமயம் ரயில் தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ரயில் தீ விபத்தின் பின்னணியில் சதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளேன்” என தெரிவித்தார்.