அண்மையில் தமிழகம் முழுதும் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நாளை(10.4.2023) முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக 79 மையங்களில் சுமார் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்குத் தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குவதற்கு முன்பே விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட சில பாடங்களின் தேர்வு விடைக் குறிப்புகள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை(10.4.2023) தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னரே எப்படி விடைக் குறிப்புகள் வெளியானது எனப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளார்களாம். மேலும் இது எப்படி நடந்தது என்றும், சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்க அரசுத் தேர்வுத் துறைக்குப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.