வேல் யாத்திரையின் இரண்டாவது நாளிலும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து இரண்டாவது நாளாக வேல் யாத்திரை துவங்க முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக வேல் யாத்திரைக் கூட்டத்தில் பேசிய எல்.முருகன், "அடுத்து அமையவுள்ள ஆட்சியைத் தீர்மானிக்கப்போவது பா.ஜ.க. தான். வரும் தேர்தலில் பா.ஜ.க. தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கப்போகிறது .எத்தனை தடை வந்தாலும் அனைத்து ஊரிலுமுள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வேல் யாத்திரை வெற்றியடையும்" என்றார்.
ஏற்கனவே திருத்தணியில் வேல் யாத்திரையின் முதல் நாளில் எல்.முருகன் உள்ளிட்டோர் கைதாகி விடுதலையாகினர். இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்றதாக எல்.முருகன் உள்பட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.