திருச்சியில் காய்கறிகள் எங்க வாங்கலாம் என்றால் காந்தி மார்க்கெட்டைத்தான் எல்லோரும் சொல்லுவார்கள். 40, 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பொதுமக்கள் திருச்சி வந்தாலும் காந்தி மார்க்கெட் போனா காய்கறிகள் வாங்கலாம், காய்கறிகள் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும் என்பார்கள். தினமும் காய்கறிகள் வாங்க ஏராளமானோர் இந்த மார்க்கெட்டுக்கு திரள்வார்கள்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையால் காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்கு பதிலாக திருச்சி நகரில் 8 இடங்களில் காய்கறி சில்லரை விற்பனை கடைகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி திருச்சி மேலப்புலிவார்டு சாலை மதுரம் மைதானம், தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணாவிளையாட்டு அரங்கின் முன்பகுதி, காவிரி ஆற்றுப்பாலம், அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மைதானம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானம், சத்திரம் பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக காய்கறிகள் விற்பனை சந்தைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்கும் வகையில் தரையில் வட்டமிடப்பட்டு இருந்தது.
திருச்சி காவிரி பாலம் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மார்க்கெட்டை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பொதுமக்கள் அரசு அறிவுறுத்தியப்படி கடைகளுக்கு முன்பு போடப்பட்டுள்ள வட்டத்திற்குள் நின்று நெரிசல் இல்லாமல் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
- மகேஷ்