அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் டிடிவி தீவிர ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கம்பத்தில் உள்ள பத்திரிகையாளர்களிடம் பேசியபோது...... மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துகிறோம் என்று கூறியிருந்தது. அதன்படி திருவாரூரில் தேர்தல் தேதியை அறிவித்து ஆனால் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என தலைமைச் செயலாளர் மற்றும் கலெக்டர் கூறியதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து தேர்தல் ஆணையம் திருவாரூர் தேர்தலை ரத்து செய்துள்ளது.
தேர்தல் அறிவித்தாலும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கலாம் என அரசு அறிவித்திருந்தது. எம்.எல்.ஏ. இல்லாததால் அந்த தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படாமல் உள்ளது. தற்போதைய கள நிலவரப்படி தேர்தலில் அதிமுக தோல்வி அடையும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்ற காரணத்தால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பொங்கல் பரிசாக நூறு ரூபாய் தான் வழங்கினார். ஆனால் எடப்பாடி அரசு ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. அப்படி என்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை மிஞ்சுகிற ஆட்சி நடக்கிறது என்று காண்பிப்பதாக செய்கிறார்களா? ஒரு தலைமைச் செயலாளர் முன்னுக்குப் பின் முரணாக பேசினால் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யாது. ஏனென்றால் பாஜகவின் பேச்சைக் கேட்டுத்தான் தேர்தல் ஆணையமே செயல்படுகிறது என்று கூறினார்.