மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதையும், அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறக்கத் துடிப்பதையும் ஏற்க முடியாது. மதுவிலக்கு வாக்குறுதி காற்றில் பறக்க விடப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் கணினி மயமாக்கவும், அவற்றையும், டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களையும் தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல் மூலம் இணைக்கவும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசகரை தேர்வு செய்து நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிடம் டாஸ்மாக் ஒப்படைத்திருக்கிறது.
டாஸ்மாக் மதுக்கடைகளை கணினிமயமாக்கும் திட்டத்தை மொத்தம் ரூ.100 கோடியில் செயல்படுத்த அரசு தீர்மானித்திருக்கிறது. மதுக்கடைகளை கணினிமயமாக்கும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் வேகம் மெய்சிலிர்க்கவைக்கிறது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அதிமுக ஆட்சி முடிவதற்குள் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் ஆட்சியாளர்களின் நோக்கம் எனும் போது மூடப்படப்போகும் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதற்கான தேவை என்ன? என்பது தான் மக்கள் மனதிலும், மதுவிலக்கை ஆதரிக்கும் சமூக ஆர்வலர்கள் மனதிலும் எழுந்த வினாவாகும்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை நிச்சயமாக மதுவிலக்கை நோக்கிய நடவடிக்கை அல்ல... மதுத் திணிப்பை நோக்கிய நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளமுடியும். ஏனெனில், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் மக்களின் வாக்குகளை வாங்கும் நோக்குடன் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தாலும், அதை செயல்படுத்த அதிமுக அரசு உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கடந்த இரு ஆண்டுகளில் அப்போது நிலவிய நெருக்கடி காரணமாக தலா 500 மதுக்கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நடப்பாண்டில் மதுக்கடைகளை மூடுவது குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்ற ஆணையைப் பெற்றது. தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால், பா.ம.க. உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதை செய்திருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கொடுத்து அந்த உத்தரவில் சட்ட விரோதமாக பல தளர்வுகளைப் பெற்றது பினாமி அரசு. பா.ம.க. வாங்கிய ஆணைகளின்படி கடைகள் மூடப்பட்டிருந்தால் தமிழகத்தில் இப்போது 2502 மதுக்கடைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், குடியிருப்புப் பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் 1500-க்கும் கூடுதலான கடைகளை திறந்ததன் விளைவாக இப்போது 4000-க்கும் கூடுதலான மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
இப்போது கூட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் ஆண்டுக்கு 1000 கடைகள் வீதம் மூட ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவை மக்களுக்கு கொடுத்து அவர்களை சுரண்ட வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட தமிழக அரசு, மதுக் கடைகளை மூடுவதற்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே மதுக்கடைகளை கணினிமயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டுகிறது.
மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை இல்லை என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மது விற்பனை தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், இவற்றையெல்லாம் பினாமி தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்குவது, ஐ.சி.டி எனப்படும் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வழிக் கற்றலை அறிமுகம் செய்தல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் 2012-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தமிழக மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கான பொதுச்சேவை பெறும் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் செய்யவில்லை. ஆனால், மக்களை அழிக்கும் மதுக்கடைகளை மூடாமல் அவற்றை கணினிமயமாக்க பினாமி அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதையும், அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறக்கத் துடிப்பதையும் ஏற்க முடியாது. எனவே, மதுக்கடைகளை கணினிமயமாக்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.