நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திருச்சி சிறுகனூரில், ஜனவரி 26ம் தேதி நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்காகப் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
சிறப்பான திட்டமிடல்
திருச்சி சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள 500மீ அகலம் - 1000மீ நீளத்திற்கு மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலின் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் என நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் பின்புறப் பக்கங்களில் முக்கியத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர், அரசமைப்பு வடிவில் திடல் வடிவமைப்பு
மாநாட்டுத் திடலின் பிரதான நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்றக் கட்டட வடிவிலும், இருபுறமும் உள்ள பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் இடம்பெற்றுள்ளார். நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களைப் பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும் அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும்.
புதிய நாடாளுமன்ற வடிவ மேடை
தலைவர்கள் உரையாற்றும் மேடை புதிய நாடாளுமன்றக் கட்டட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தலைவர்களின் ஒளிக்காட்சிகள்/பிற காட்சிகள் தொண்டர்களுக்குக் காண்பிக்கப்படும்.
வல்லுநர் குழுவினர் மேற்பார்வை
வழக்கமாக விசிக கட்சியின் தேர்தல்/பிரச்சாரம் மற்றும் மாநாட்டுப் பணிகளைக் கட்சியினர் மட்டுமே செய்து வந்த நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரத்யேகக் குழு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வெற்றிக்குப் பணியாற்றிய ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் ஊடகப் பிரிவை கவனித்து வந்த, தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைத்தவர்கள் விசிக கட்சியின் மறுசீரமைப்பு பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்களின் தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாக விசிகவின் கட்சி சீரமைப்பு/ஒருங்கிணைப்பு/புதிய நிர்வாகிகளை அடையாளம் காணுதல்/கட்சி மறுகட்டமைப்பு, திருமாவளவன் பொன்விழா, வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த குழுவினர் மாநாட்டின் முழுமையான வடிவமைப்பு/ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளைத் தொடர்ந்து விசிகவும் தேர்தல் மற்றும் பிரச்சார பணிகளுக்கு கட்சியினரைத் தாண்டியும் வல்லுநர் குழுவை அமைத்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.