
தலைநகர் டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டது. இதனால் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என்று டெல்லி தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.
இதனையடுத்து, கடந்த 8ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் 48 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் 22 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாமல் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்தது.
டெல்லி மாநிலத்தின் புதிய முதல்வர் குறித்து எந்தவித அறிவிப்பும் வராத நிலையில், தற்போது பா.ஜ.க தலைவர் ரேகா குப்தா டெல்லியில் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க இன்று பா.ஜ.க பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், தன்கர் முன்னிலையில் பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருமனதாக ரேகா குப்தா என்பவர் டெல்லி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை (20-02-25) பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுடன் நாளை 6 அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை, பா.ஜ.க சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.
டெல்லி முதல்வராக தேர்வாகியுள்ள 50 வயதான ரேகா குப்தா ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். கல்லூரி காலத்தில் அரசியலில் ஈடுபட்டிருந்த ரேகா குப்தா, பா.ஜ.கவில் இணைந்து அக்கட்சியின் மகிளா மோர்ச்சா தலைவராகப் பொறுப்பு வகித்தார். இளம் வயதில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்ட ரேகா குப்தா, தற்போது எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்டசபைக்கு முதல்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வான ரேகா, முதல்வராக வாய்ப்பை பெற்றுள்ளார்.