
கடலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் சென்று புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவற்ற பணிகளை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அமைச்சர்கள் கூறுகையில், தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகளின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பொருளாதாரத்தில் மேன்மை அடையும் வகையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவற்ற பணிகள் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து 22-ஆம் தேதி வேப்பூர் வட்டம் திருப்பெயர் பகுதியில் நடைபெற உள்ள பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் முதல்வர் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் ரூ.498.79 கோடி நிவாரண நிதி உதவியாக 5,18,783 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளார். ஃபென்ஞல் புயல் கனமழை மற்றும் தென்பனையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.166.68 கோடி மதிப்பீட்டிலும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.42.73 கோடி மதிப்பீட்டிலும் 2 லட்சத்து 1344 விவசாயிகளுக்கு ரூ.209.41 கோடி மதிப்பிட்டிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது” என தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையர் அணு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.