தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அத்தோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளிற்கு இணங்க விசிக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளனர். அதன்படி ரூ.10 லட்சம் நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தற்போது வழங்கியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “புயல் பாதித்த பிறகு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்ற்றும் அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். ரூ. 4000 கோடிக்கான வடிகால் திட்டப் பணிகள் பாதி அளவு முடிந்திருக்கிறது என்ற புள்ளி விவரங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த பணிகளை விரைவில் செய்வார்கள். அடுத்த மழைக்கெல்லாம் இந்த பாதிப்பு இருக்காது என்று நாம் நம்புவோம்” என்றார்.