தீபாவளி பண்டிகையொட்டி, உள்ளூர் ரவுடிகள் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல், பொருள்களை சூறையாடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிகத்தளங்கள், சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுக்கும் ரவுடிகளை கைது செய்ய ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (அக். 22) முழுவதும் ரவுடிகள் மீதான வேட்டை தொடர்ந்தது.
இந்த அதிரடி வேட்டையில் சேலம் மாநகர பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24), அன்னதானப்பட்டி பிரகாஷ், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்வரன் (24), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அம்மாபேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்கிற சதீஷ் என்கிற கோட்டையன் (26), அழகாபுரத்தைச் சேர்ந்த விஜய் என்கிற விஜய்குமார் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, அடிதடி வழக்குகள் உள்ளன. காவல்நிலையங்களில் இவர்கள் மீது தனித்தனியாக போக்கிரித்தாளும் (ஹிஸ்டரி ஷீட்) பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் உள்பட இதுவரை தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க முயன்ற 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.