சசிகலாவின் பினாமி எனக் கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராகப் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம், சென்னை பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டிடத்தைக் கட்டியது. சசிகலாவின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்திற்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் கங்கா ஃபவுண்டேஷன்ஸ் நிறுவனத்தின் தரப்பில், அதன் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஸ்பெக்ட்ரம் மால் கட்டிடத்தை விற்பனை செய்யும்படி, மறைந்த முதல்வர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக சிலர் நிர்ப்பந்தித்ததால், ஸ்பெக்ட்ரம் மாலை 192 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, 130 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சியைப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் வருமான வரித் துறை, பினாமி சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தை பினாமி நிறுவனம் எனத் தீர்மானித்தது தவறு எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு மார்ச் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.