கடந்த 2018- ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் திட்டக்குடி வட்டத்திற்கு உட்பட்ட தொழுதூர், சிறுப்பாக்கம், மங்களூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்த 1,800 லிட்டர் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்துவந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுபாட்டில்களைக் கடத்தியவர்கள் மீது 517, 518, 595 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திட்டக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதே சமயம் 3 லட்சம் மதிப்பிலான 1,800 லிட்டர் மதுபாட்டில்கள் விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அங்கு போதுமான பாதுகாப்பு மற்றும் இடவசதி இல்லாத காரணத்தினால் அந்த மதுபாட்டில்கள் அனைத்தையும் அழிப்பதற்கு மதுவிலக்கு காவல்துறை திட்டக்குடி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த மது பாட்டில்களை அழிப்பதற்கு திட்டக்குடி நீதிமன்றம் நேற்று (29/05/2020) உத்தரவிட்டதன் பேரில் திட்டக்குடி நீதிமன்ற மாஜிஸ்திரேட் தாமரை இளங்கோ முன்னிலையில் விருத்தாசலம் மதுவிலக்கு காவல் இன்ஸ்பெக்டர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் நீதிமன்ற அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்களைக் கொட்டி அழித்தனர்.