
'புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும்' என அண்மையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையொட்டி மீண்டும் தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதங்கள் எழுந்தது. மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக,அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
நேற்று (09/03/2025) நடைபெற்ற திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 'மும்மொழி கொள்கை பிரச்சனையில் நம்முடைய வாதங்களை மிக எச்சரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். இந்தி திணிப்பைதான் நாம் எதிர்க்கிறோமே தவிர இந்தி மொழியையோ அல்லது இந்தி பேசும் மக்களையோ நாம் எதிர்க்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்பிக்கள் மத்தியில் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
மத்திய கல்வி அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் மக்களவையில் 'தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வேண்டும்' என முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.