
இசைஞானி இளையராஜா கடந்த ஆண்டு 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் அவர் உருவாக்கியுள்ள முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் 08.03.2025 அன்று நடைபெற்றது.
முன்னதாக திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிம்பொனி நிகழ்ச்சி முடிந்து லண்டனில் இருந்து இன்று இளையராஜா தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவை அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் கரு.நாகராஜன் , விசிக சார்பில் வன்னியரசு, இசையமைப்பாளர் தீனா, திரைப்பட இயக்குநர் பேரரசு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா,''அனைவருக்கும் நன்றி. மிகவும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல. மியூசிக் எழுதிவிடலாம் எழுதிக் கொடுத்தால் அவர்கள் வாசித்து விடலாம். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வாசித்தால் எப்படி இருக்கும். கண்டக்டர் மைக்கேல் டேம் என்பவர் ஒவ்வொரு நோட்டாக என்னென்ன எழுதினேனோ அதை அத்தனையும் கொடுத்துள்ளார்.
சிம்பொனி முழுக்க நான்கு பகுதிகளாக கொண்டது. ஃபர்ஸ்ட் மொமென்ட்; செகண்ட் மொமண்ட்; தேர்ட் மொமெண்ட்; போர்த் மொமண்ட் என நான்கு மொமெண்ட் முடியும் வரைக்கும் யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்டக் கூடாது. அது விதிமுறை. ஆனால் ரசிகர்கள், அங்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் ஃபர்ஸ்ட் மொமெண்ட் முடிந்தவுடன் கைதட்டினார்கள்.அங்கு வாசிப்பவர்களுக்கும் ஆச்சரியம். எல்லோரும் என்னைப் பார்க்கிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை. முதல்வர் அரசு மரியாதைக்கு உடன் வரவேற்றதே என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பது, வரவேற்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை நீங்கள் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. இதே நேரடியாக கேட்க வேண்டும்'' என்றார்.