கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை தமிழக டிஜிபி செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது கோவையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ''அசிஸ்டன்ட் கமிஷனர் போலீஸ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்திற்கு உடனே சென்று பாதுகாப்பாக வைத்து அதன் பிறகு இந்த குறிப்பிட்ட நபர் யார் என்பதை கார் மூலமாக கண்டுபிடித்து இன்றோடு சேர்த்து 6 குற்றவாளிகளை இந்த வழக்கில் மிகத் துரிதமாக கைது செய்துள்ளார்கள். இதற்கான எல்லா ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பே ஐந்து பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இரண்டு நாள் விசாரணையில் இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதில் ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
குறுகிய காலத்தில் இதுபோன்ற வழக்கில் துப்புத்துலக்கி குற்றவாளிகளை கைது செய்து ஆதாரங்களைத் திரட்டிய கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வெகுமதிகள் கொடுத்திருக்கிறோம். தமிழக முதல்வர் இந்த வழக்கை என்.ஐ.ஏ விற்கு பரிந்துரை செய்யலாம் என தெரிவித்திருக்கிறார். இன்று உள்துறை செயலகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு கொடுப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் கமிஷனரும்,என்.ஐ.ஏ அதிகாரிகளும் வந்துள்ளார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஒரு மீட்டிங் நடத்தினோம். மேற்கொண்டு இந்த வழக்கை அவர்கள்(என்.ஐ.ஏ) எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நமது தமிழக காவல்துறை செய்து கொடுக்கும். புலன் விசாரணை பற்றிய எல்லா விவரங்களையும் சொல்ல முடியாது. மொபைல் உள்ளிட்ட இந்த வழக்கில் கிடைக்கப்பெற்ற எல்லா ஆதாரங்களையும் என்.ஐ.ஏ விற்கு நாம் ஒப்படைப்போம்'' என்றார்.