Skip to main content

’’இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது’’ - சுட்டிக் காட்டும் திமுக

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
d3

 

திமுக மாவட்ட கழகச்செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தீர்மானம் : 1

உலகெங்கும் வாழும் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

உலகெங்கும் பரவி வாழ்ந்துவரும் தமிழினத்தின் பேரன்பையும் உளப்பூர்வமான பாசத்தையும் உயரிய மதிப்பையும் பெற்றிருக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் கழகத்திற்கு மட்டுமல்ல - ஒட்டு மொத்த தமிழினத்திற்கே என்றும் மாறா இன்பநாள்; பொங்கிடும் மகிழ்ச்சிக்குரிய புகழ்த் திருநாள்.

தனது 14வது வயது தொடங்கி பொது வாழ்விலும்,  1969ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றும் - திராவிட இயக்கத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - தமிழின, மொழி மேம்பாட்டுக்கும், மாநில முன்னேற்றத்திற்கும் ஓயாது பாடுபட்ட ஒரே தலைவர்.

 

தேசிய அளவில் தலைவர் கலைஞர் ஆற்றிய பணிகளும் பங்களிப்பும், தீட்டிச் செயல்படுத்திய திட்டங்களும் இன்றைக்கும் பலகோடி மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருப்பதை இந்தத் தலைமுறை உணர்ந்திருக்கிறது.

 

‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ என்ற தாரக மந்திரத்தை தன் நெஞ்சில் சுமந்து, தன்மான உணர்வு, சுயமரியாதை, சாதிமத பேதமற்ற உணர்வு, பகுத்தறிவு, தமிழுணர்வு, இன எழுச்சி போன்றவற்றை நிலை நாட்டுவதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் மெய்வருத்தம் பாராது கண்துஞ்சாது உழைத்துக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள், கழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் இல்லத் திருவிழா என்பதை மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

 

தலைவர் கலைஞர் அவர்கள் காட்டிய மதச்சார்பின்மையும், எழுப்பிய மாநில சுயாட்சிக் குரலும் இன்றைக்கும் பல்வேறு மாநிலங்களின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களுக்கு வயது 95 என்றால் அதில் சமூகநீதிக் கொள்கைக்காகவும் - அன்னைத் தமிழ் மொழிக்காகவும், சமத்துவம்-சமநீதிக்காகவும் அவர் நடத்திய தொடர் போராட்டங்களுக்கு 75 வயது இருக்கும். ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்கும் மேல் பணி,

19 ஆண்டுகள் முதலமைச்சர், போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி, நாட்டின் பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களை அடையாளம் காட்டித் தேர்ந்தெடுத்த முதிர்ந்த அனுபவமும், கூர்த்த மதிநுட்பமும் பன்முகப் பேராற்றலும் நிறைந்த ஒரு தலைவராக நூற்றாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்திற்கு தலைவர் கலைஞர் இருந்து வழிகாட்டி வருகிறார் என்பதை இந்தக் கூட்டம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறது. அந்த மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை, தமிழகமெங்கும் பட்டிதொட்டிதோறும் கழகக் கொடியேற்றியும் - பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கழகத் தொண்டர்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

d4


தீர்மானம் :  2

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் - உறுப்பினர்களை உடனடியாக நியமித்து, ஜூன் 12இல் மேட்டூர் அணையை  நீர்பாசனத்திற்காக திறந்து விடுக!


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன் 1ஆம் தேதிக்குள் “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்” அமைத்திருக்க வேண்டிய மத்திய அரசு நேற்றைய தினம் அப்படியொரு ஆணையம் அமைக்கப்படும் என்று மட்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது. மாநிலங்களின் பிரநிதிகளின் பெயரும் இடம்பெறவில்லை; தலைவர் யார் என்பதும் தெளிவாக்கப் படவில்லை. அரசிதழில் வெளியிடும் முன்பே சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து உறுப்பினர்களின் பெயர்களைப் பெற்று, மத்திய அரசும் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களைத் தேர்வு செய்து ஒரு முழு வடிவிலான காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதை அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்தான் ஆணையம் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரமுடியும்.

 

அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி மாநிலங்களுக்கு இடையிலான திருத்தியமைக்கப்பட்ட காவிரி நீர் ஒதுக்கீடு குறித்தும் “வரைவுத் திட்டத்திலும்” இல்லை.

 

இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. ஒன்பது உறுப்பினர்களில் ஐந்து பேர் மத்திய அரசைச் சார்ந்திருப்பவர்கள். அதுமட்டுமல்ல, இந்த ஆணையம் தன்னாட்சி அதிகாரம் இல்லாத, சுதந்திரமில்லாத, அணைகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திட இயலாத, கண்காணிப்பு ஆணையமாகவே அமைந்துள்ளது.

 

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இன்னும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் மேலும் தெளிவின்மையையும் குழப்பங்களையும் உருவாக்கி, அதன் செயல்பாடுகளைத் தாமதப்படுத்து வதிலேயே ஆர்வமாக இருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றால் இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது; ஜூன் 12 அன்று திறக்கப்பட்டால்தான், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டாவது டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடிக்கு உதவும் என்பதையும் இந்தக் கூட்டம் வலியுறுத்திச் சுட்டிக் காட்டுகிறது.

 

d5

 

தீர்மானம் :  3

அ.தி.மு.க.வின் கைகளில் சிக்கிச் சீரழியும் சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டுருவாக்கிட
தி.மு.க. மீண்டும் சட்டமன்றக்  கூட்டத்தில் பங்கேற்கும்!


சட்டமன்ற ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப்  புதைத்து, பேரவையின் பாரம்பரியமான மரபுகளைச் சிறிதும் மதிக்காமல் அவற்றை அலட்சியப்படுத்தி, மனம் போன போக்கில் மன்றத்தின் சட்ட அமைப்பையே தலைகீழாக மாற்றி அமைத்து மன்றத்தின் மாண்பையும் - சீலத்தையும் சீர்குலைத்து வருகிறது ஆளும் அ.தி.மு.க. அரசு.

 

ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக - தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற எண்ணிச் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலுவான குரல்களுக்கு மதிப்பளிக்காமல், சர்வாதிகாரச் சிந்தனையோடு அக்கிரமமாகச் செயல்பட்டு வருகிறது ஆளும் அ.தி.மு.க. அரசு. 

 

மத்திய பா.ஜ.க. அரசின் தயவில் அதன் கட்டளையை ஏற்று எடுபிடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை, எவ்வித சட்டச் சிக்கலுக்கும் இடம் தந்து விடாமல், கார்ப்பரேட் ஆணவத்திற்கும்  - ஆசை வார்த்தைக்கும் அடிபணியாமல், நிரந்தரமாக  மூடிவிட, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்ற தி.மு.கழகத்தின் கோரிக்கையைக்கூட ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதைத் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்குக்  கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறது.

 

இந்தப் புறக்கணிப்பினால், அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோத - வெகுமக்கள் விரோதப் போக்கை தமிழகம் புரிந்து கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு தன்பக்கம் இருக்கிறது என்ற தைரியத்தில், சட்டத்தின் ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு, அராஜகமாகவும் அரக்கத்தனமாகவும் போலீஸ் ராஜ்யம் நடத்திவரும் இந்த அரசின் நிர்வாக அலங்கோலத்தை பொதுமக்கள் முழுவதுமாக  உணர்ந்திட வைத்திருக்கிறது. கழகம்  நடத்திய மக்களுக்கான மாதிரி சட்டமன்றம் தமிழ்நாட்டின் ஜனநாயகம் போற்றிடும் வகையில், சட்டமன்றம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்றது.

 

இந்நிலையில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டத்தில், நல்லெண்ணத்துடனும் ஜனநாயகத்தைப் போற்றிக் காப்பாற்றும் அக்கறையுடனும்பேசிய தோழமைக் கட்சிகளின் மரியாதைக்குரிய தலைவர்கள், “சட்டப்பேரவை ஒன்றும் அதிமுகவின் தனி உடைமை அல்ல, அது தமிழக மக்களின் ஜனநாயகச் சொத்து, எனவே சட்டமன்ற நடவடிக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்ள வேண்டும்; எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தொகுதி மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கி யிருக்கிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. அரசின் அடாவடிச் செயல்களால் பெரிதும்  பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களும் கழகத் தலைமையைத் தொடர்பு கொண்டு அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலிக்க, சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

 

சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், மரபுகளுக்கும், ஆக்கபூர்வமான அறிவார்ந்த விவாதங்களுக்கும் அ.தி.மு.க ஒத்துழைக்கவில்லை என்றாலும், எப்போதும் ஜனநாயகத்தின் மீதும் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக்  கழகம், தோழமைக் கட்சித் தலைவர்களின் கருத்துக்கும், வேண்டுகோளுக்கும் இந்த அரசால் பாதிக்கப்படும் மக்களின்  எதிர்பார்ப்பிற்கும் மதிப்பளித்து,  இனிவரும் நாட்களில் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

சார்ந்த செய்திகள்