இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த விமான முனையம் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான முனையத்தில் தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். எவ்வகையில் விமான முனையம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐஎன்எஸ் அடையாறு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். சாலை மார்க்கமாக காரில் பிரதமர் மோடி வந்த பொழுது அவருக்கு சாலையின் இருபுறம் இருந்தும் மக்கள் அவரை வரவேற்றனர். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். முன்னதாக ரயிலில் ஏறி பார்வையிட்ட பிரதமர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இருந்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் 160 கி.மீ ஆகும். 490 கி.மீ. தூரத்தை 5.50 மணிநேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு 11.50 மணியளவில் வந்தடையும். சென்னையில் இருந்து மீண்டும் பிற்பகல் 2.25 மணியளவில் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவைக்கு வந்தடையும். வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு சில மணிநேரங்களில் முதல் 2 நாள் பயணங்களுக்கான டிக்கெட்கள் விற்றன. வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.