கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அங்கிருக்கும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
1965 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என சுமார் 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு அங்கு வந்தது. இந்நிலையில் வ.உ.சி உயிரியல் பூங்காவில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை எனவும், இயற்கைச் சூழல் இல்லை எனவும் கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.
மாநகராட்சி சார்பில் அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்ட நிலையிலும், அங்கீகாரத்தை தர மத்திய ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறை மேற்கொள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்நிலையில், கோவையில் உயிரியல் பூங்காவில் இருக்கும் பறவைகள், விலங்குகள் ஆகியவை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலைகள், கிளிகள், மான்கள், பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் பாதுகாப்பாக கூண்டில் அடைக்கப்பட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.