மாநிலங்களவை எம்பி தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனுதாக்கல் செய்தார்.
சென்னையில் கடந்த 2 ஆம் தேதி நடந்த மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் இருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர். 2009ல் வைகோ மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கில் நேற்று அவருக்கு ஒரு வருட சிறை,10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தீர்ப்பினால் அவர் மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடுவதில் எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று வேட்புமனுதாக்கல் செய்ய சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த அவர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்காக சிறிது நேரம் காத்திருந்தார். அதன்பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் வருகைதர, வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவர்களுடன் கனிமொழி, பொன்முடி, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்திருந்தனர். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் வில்சன், சண்முகன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.