சிதம்பரம்-சீர்காழி மெயின் ரோடு விபீஷ்ணபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட குமராட்சி ஒன்றிய கிழக்கு, மத்திய, மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர்கள் கிருஷ்ணசாமி, குணசேகரன், ஆனந்த சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு தென்னங்கன்று வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக கிளைக் கழக செயலாளர்கள் கிராமப்புறங்களில் நல்ல முறையில் பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி கிடைக்கும். ஒன்றிய செயலாளர்கள் கெத்துடன் செயல்பட வேண்டும். கிராமப்புறத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி இல்லை என்றால் திமுக கிளை செயலாளர்களை பிடித்து பொதுமக்கள் கேட்க வேண்டும். அப்படி அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் எனது தொலைப்பேசி எண்ணிலோ அல்லது எனது உதவியாளர் எண்ணிலோ எனக்குத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும்.
கிராமப்புறத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு அனைத்து இடங்களிலும் கொடியேற்ற வேண்டும். அப்படி ஏற்றினால் தான் கட்சியை வளர்க்க முடியும். எனவே அனைவரும் அரசு பதவியை எதிர்பார்த்தால் உடனே கிடைக்காது. பொறுத்தால்தான் பூமி ஆள முடியும். எனவே அனைவரும் பொறுமையாக கட்சிப் பணியை செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு பதவி தேடி வரும்'' என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் ராஜேந்திர குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.