தாயைப் பிரிந்த வேதனையில் தவறான செயல்களைச் செய்து வந்த மகனின் தந்தைக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் ஒரு தாய் இறந்துவிடுகிறார். அதன் பிறகு அவரின் கணவரும் மகனும் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தந்தை தனது மகனின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு தனது வேலையை விட்டு மகனுடன் நேரத்தைச் செலவிட்டார். ஒரு கட்டத்தில் தந்தை வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மகனை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்துவிட்டு வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் மகன் அம்மா இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறான். அந்த வலிகள் போவதற்கு ஹாஸ்டலில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்கள் கெட்டப் பழக்க வழக்கங்களைப் பழகுகிறான். மேலும் தனது தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படியாமல் மோசமான மனநிலையுடன் இருந்திருக்கிறான்.
தனது மகனின் செயல்களால் எரிச்சலான தந்தை அடிக்கடி அவனை அடித்துக் கடிந்துகொண்டு புத்திமதி சொல்லியிருக்கிறார். இருப்பினும் மகன், தாய் பாசத்திற்கு ஏங்கி அதிலிருந்து துளியும் மீள முடியாமல் தவறுகளைச் செய்து தந்தையின் கண்டிப்பைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தான். இதனால் தந்தை, தனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்கச் சொல்லி என்னிடம் புலம்பியபடி என்னிடம் அழைத்து வந்தார். முதலில் அந்த பையனிடம் நான் பேசியபோது, அவனுக்கு அந்த ஹாஸ்டல் வாழ்க்கை பிடிக்காமல் இருந்ததும் தாயைப் பிரிந்த வேதனையில் தவறான செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சில நேரம் கவுன்சிலிங் கொடுக்கும்போது அந்த பையன் சொல் பேச்சை கேட்கமாமல் இருப்பான். அதனால் என் கண் முன்னாடி அந்த தந்தை தனது மகனை அடித்திருக்கிறார். அடிப்பது தவறானது என்று என்னால் முடிந்தளவு அந்த பையனிடம் இருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை வெளிக்கொண்டுவர முயற்சித்தேன்.
அந்த பையனின் தந்தையிடம், மகனின் மீது கோபத்தைக் காட்டாமல் அன்பாக நடத்துங்கள், ஏற்கனவே அம்மா இல்லாமல் வேதனைப்பட்டு தவறான வழிகளில் சென்றுள்ளான். மேலும் காயப்படுத்தினால் அவன் கண்டிப்பாகப் பாதிப்படைவான் என்று அறிவுரை கொடுத்தேன். மேலும் பையன் இப்போது தனக்கு விருப்பமான சில விளையாட்டுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறான். தொடர்ந்து கவுன்சிலிங் அழைத்து வந்தால் கண்டிப்பாகத் தேற்றிவிடலாம் என்று அந்த தந்தையிடம் கூறியிருக்கிறேன். அவரும் விரைவில் வேறு வேலையைத் தேடி தன் மகனை ஹாஸ்டலில் இருந்து அழைத்து தன்னுடன் வைத்து படிக்க வைக்கவுள்ளேன் என்று கூறியிருக்கிறார். சிங்கிள் பெற்றோர்களாக தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் மனநிலைக்குகேற்ப தங்களை மாற்றிக்கொண்டு குழந்தைகளின் தேவையை அறிந்து செயல்பட்டாலே இதுபோன்ற மோசமான மனநிலைக்கு குழந்தைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றார்.