கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். நாடுமுழுவதும் தினம் தோறும் தூய்மைப் பணியாளர்களை, கவுரவிக்கும் விதமாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகக் கடலூர் சிறகுகள் குழு சார்பில் இரவு பகல் பாராது பணியாற்றக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ துவக்கி வைத்து தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, ஊரடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விளக்கினார்.
கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்குப் பொருட்களை வழங்கினார்.
மேலும் கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள தினசரி கூலித்தொழில் மேற்கொள்ளும் கொத்தனார்கள், பந்தல் அமைப்பாளர்கள் மற்றும் வறுமை நிலையில் இருந்த குடும்பத்தினருக்கு தினசரி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட கெமிக்கல்-மாதவன் என்பவர் மூலம் கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி கலந்து கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார். நிகழ்வில் ஒவ்வொருவரும் சரியான சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுமா, தலைவாழை இலை போட்டு தாய் உள்ளத்தோடு உணவு பரிமாறினார். தூய்மைப் பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பேரூராட்சியில் உள்ள பணியாளர்கள் காலையில் வேலையை முடித்து அலுவலகத்தில் வந்து உணவு அருந்தும் விதமாகத் தினம் தோறும் மதியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுகள் ஏற்பாடு செய்யபட்டு, அவர்கள் உணவு அருந்தும் விதமாக இருக்கைகள் போடப்பட்டு உணவு கொடுக்கப்படுகிறது. தமது மேல் அதிகாரி தங்களுக்கு உணவு பரிமாறி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.