உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் தோஸ்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு, பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, கடந்த 17ஆம் தேதி, 30 வயது இளைஞர் ஒருவரை மணக்கவிருந்தார்.
மணப்பெண் பட்டப்படிப்பு முடித்து பட்டதாரியாக இருக்கும் அதே வேளையில், மணமகன் 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மணப்பெண், திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நாளில், அனைவர் முன்னிலையிலும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
இரு குடும்பத்தாரும், மணப்பெண்ணிடம் பல நேரமாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனாலும், அது பலனளிக்காததால், அந்த திருமணம் பாதியில் நின்றது. இதனையடுத்து, வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடும்பத்தினரிடமே மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர். மாப்பிள்ளை குறைவாக படித்திருந்ததால் மேடையிலே திருமணம் செய்து கொள்ள மறுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.