Skip to main content

ஓயாத ஹெல்மட் பிரச்சனை: தி.நகரில் இளைஞரை கொடூரமாக தாக்கிய காக்கிகள்!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
police t nagar


சென்னை தி.நகரில் போக்குவரத்து காவலர்கள் சிலர் இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், இளைஞர் ஒருவர் தன் தாய், சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர்கள், ஹெல்மட் அணியாத காரணத்திற்காக அந்த இளைஞரை மறித்துள்ளனர். அதில் அந்த இளைஞருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த போலீசார் அந்த இளைஞரை தரதரவென்று சட்டையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது தன் மகனை காவலர்களிடம் காப்பாற்ற முயற்சி செய்த இளைஞரின் தாயை போக்குவரத்து காவலர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் முன்னால் கொடூரமாக தாக்கியுள்ளனர். தன் தாயை தாக்குவதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த இளைஞர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சட்டையை பிடித்துள்ளார்.
 

police s


இதனால், மேலும் ஆத்திரமடைந்த காவலர்கள் நான்கு, ஐந்து பேர் ஒன்று சேர்ந்து, அந்த இளைஞரை நடுரோட்டில் கம்பத்தில் கட்டி வைத்து கையை முறித்து கொடூரமாக தாக்குகின்றனர். பார்ப்போர் மனதை பதபதைக்க வைக்கும் அளவிளான இந்த வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் வடபழனி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வந்தத பிரகாஷக்கு அபராதம் விதித்த போது, காவலர்களுடன் அவர் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் மோதலில் ஈடுபட்டதாக அவரை கைது செய்த காவல்துறையினர். அதே சிசிடிவி வீடியோ காட்சியில் இளைஞரின் தாயை காவலர்கள் கொடூரமாக தாக்குவதும் பதிவாகியுள்ளதை பார்க்கவில்லையா? நடுரோட்டில் பெண் என்று கூட பாராமல் இளைஞரின் தாயை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாதா? என வீடியோ காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்னதாக, கடந்த மாதம் திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் சுமார் 3000 பேர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கினர். பொதுமக்கள் கொந்தளிப்பு காரணமாக உஷா மரணத்திற்கு காரணமாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னும், ஹெல்மட் சோதனை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் பணம் பறிப்பதும், அவர்களிடம் அவதூறாக பேசுவதும், காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதும் என காவல்துறையினரின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்