
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது கன்றாம்பல்லி ஊராட்சி. இங்குள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆண்டுவிழா கடந்தவாரம் இறுதியில் நடைபெற்றது. மாதனூர் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் சுரேஷ், முருகேசன், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுபிதாகணேசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளார். விழாவினை பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் திடீரென ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான கணேசன் மேடையேறி, ‘மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா? உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு, நீதாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு...’ இப்படி நீள்கிறது அந்த பாடல் வரி பாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைவிட அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், இந்த கணேசன் மீது கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், சென்னை, பெங்களூரூ போன்ற மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவரை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையில் திருட்டு வழக்கில் கைது செய்தனர். அப்போது அவர்களை தாக்கிவிட்டு போலீசார் போட்ட கை விலங்கை தனது ஆதரவாளர்கள் துணையுடன் உடைத்து தப்பித்த ஓடி தலைமறைவானார். அதன்பின்னர் லோக்கல் போலீஸார் எச்சரித்து மிரட்டி கோவை போலீஸாரிடம் சரணடையச் செய்தனர். 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அந்த நபர் தான் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ – மாணவிகள் மத்தியில் குத்தாட்ட பாடல் பாடினார். இவரெல்லாம் குழந்தைகளுக்கு என்ன நீதியை சொல்லிவிடப்போகிறார். இவரையெல்லாம் எதற்கு மேடையேற்றினார்கள் என்கிற கேள்வி அப்பகுதி மக்களிடம் இருந்தும், சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் எழுகிறது.
கல்வி துறையினரோ, நாங்கள் ஊராட்சி மன்ற தலைவரை விழாவுக்கு அழைத்தோம். பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர் என்றால் அவர்களது கணவரோ, அண்ணன் தம்பியோ தானே ஆக்டிங் தலைவராக செயல்படுகிறார்கள். அதுபோல்தான் இவரும் ஒர்ஜினல் தலைவர் டம்மியாகவும், இவர்கள் ஆக்டிங் தலைவர்களாகவும் செயல்படுகிறார்கள். இவர் வந்து மேடையேறிப் பாட்டுப்பாடுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.