ஆண்களுக்கு பெண் சளைத்தவளில்லை என்கிற வகையில் ஆண்களோடு எல்லா துறையிலும் பெண்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பணியாற்றி வளர்ச்சி பெறுகிறார்கள். ஆனாலும், பெண் குழந்தையென்றால் பாரமாக நினைக்கும் மனப்போக்கு இன்னும் மக்களிடம் இருப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.
திருவண்ணாமலை நகரம், கொசமடத்தெருவில் கல்யான் ஜிவல்லர்ஸ் எதிரேயுள்ள குப்பைத்தொட்டியில் இருந்து குப்பை சேகரிப்பாளர்கள் இன்று காலை 6 மணிக்கு சென்றபோது, துணியால் சுத்தப்பட்ட பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் பெண் குழந்தை தொட்டியில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர்.
அவர்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்துவிட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அங்குவந்து அந்த குழந்தையை பெற்றுக்கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
இந்த தகவல் உடனடியாக சமூக நலத்துறை மற்றும் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை நகர காவல்துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்தச்சாலை அதன் அருகில் உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர். அதோடு, இந்த குப்பைத்தொட்டி சாலைக்கு அருகில் சில தனியார் கிளினிக்குகள் உள்ளன. அங்கு பிரசவமான குழந்தையாகத்தான் இது இருக்கும். இதுப்பற்றி தனியார் கிளினிக்குகளில் விசாரணை நடத்தவுள்ளோம் என்றார்கள் போலிஸார்.
தமிழகத்தில் குழந்தையில்லாமல் பல நூற்றுக்கணக்கான தம்பதிகள் தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என மனத்துயரத்தோடு வாழ்கிறார்கள். 10 மாதம் சுமந்து பெற்ற தன் உதிரத்தால் பிறந்த பச்சிளம் குழந்தையை ஒரு தாயால் எப்படித்தான் தெருவில் வீச முடிகிறதோ எனத்தெரியவில்லை.