பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக போஸ்ட்டர் ஒட்டிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சி காவல் துறையினரால் நள்ளிரவில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அதிமுக பொறுப்பாளர்கள் காவல் நிலையத்தில் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மகாலிங்கம் , பிரகாஸ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் அனைத்து கட்சியினர் சார்பாக வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிகிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று அரசியல் கட்சிகள் உறுதியோடு உள்ளதால் அவர்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்று நள்ளிரவு விசாரணை கள் நடக்கின்றன என குற்றம்சாட்டுகின்றனர் மாதர் சங்கத்தினர்.
பொள்ளாச்சி அதிமுக பிரமுகர்களான, ராஜா முகமது, மகாசைன் பிளக்ஸ் கோபி ஆகியோர் தகராறு செய்துள்ளனர். உடனடியாக பொள்ளாச்சி ஜெயராமன் தலையிட்டதன் அடிப்படையில் ரோந்து காவல் துறையினர் புகார் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர், மகேந்திரன் சட்டவிரோதமாக சுவரோட்டி ஒட்டியதாக மகாலிங்கம் (கம்யூனிஸ்ட் கட்சி) பிரகாஸ் (திராவிடர் விடுதலை கழகம்) கல்லுசாமி (தி.மு.க) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மகாலிங்கம் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை செயலிழக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்துவோம் என்று கூறினார்.
-சிவா