பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்குப் பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.
இதனையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம் இந்த் தேர்தலில் தமிழ் பெண்ணான உமா குமரன் என்பவர் தொழிலாளர் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உமா குமரன் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.