இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் டாஸ்மார்க் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கான போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் டேன்டீ தொழிலாளர்களுக்கு உடனே போனஸ் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று இந்த அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், குன்னூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக (டேன்டீ - TANTEA) தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை டேன்டீ தொழிலாளர்களுக்கு வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.