நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஒருநாள் பயணமாக வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோட்டூர் அருகே உள்ள சில கிராமத்து மக்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமல்லாமல் உடனடியாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை நிறுத்தாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராம மக்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது "தமிழக முதல்வரே திரும்பி போ" என்ற கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டத்தைச் சிறப்பு வேளாண் மண்டலமாக சட்ட மன்றத்தில் அறிவித்தார். அதற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காகவும், நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காகவும், இன்று 7ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு ஒருநாள் பயணமாக முதல்வர் பழனிச்சாமி வந்திருந்தார். அவருக்கு கருப்புக் கொடி காட்டவேண்டிய அவசியம் என்ன எனப் போராட்டத்தில் இருந்த மக்களிடமே விசாரித்தோம்.
அப்போது, "சோழங்கநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.சி.ஜி புதிய எண்ணெய்க் கிணறு கடந்த 1 வருடமாக செயல்பட்டு வருகிறது. இதை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும், ஓ.என்.சி.ஜி கிணற்றை மூட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். தற்போது நடைபெற உள்ள பாராட்டு விழாவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தனர்.