Skip to main content

வி.ஏ.ஓ.வின் வக்கிரம்! கைம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Viluppuram nallapalayam VAO Arogyadass suspended

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது இளம்பெண் ஒருவர். இவரது கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவனை இழந்து வசித்துவரும் அந்த பெண், தனது கணவன் இறந்த இறப்புச் சான்றிதழும், விதவை சான்றிதழும் வழங்கக் கோரி இ-சேவை மூலம் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டிய நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், பரிந்துரை செய்யாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். 

 

இதற்காக அந்த கிராம நிர்வாக அலுவலரை அந்த பெண் நேரில் சென்று சந்தித்து சான்றிதழ்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு 3000 ரூபாய் பணம் தயார் செய்து கொண்டு போய்கொடுத்துள்ளார். அந்த 3000 ரூபாய் பணத்திற்கு அவரது கணவரின் இறப்புச் சான்று மட்டும் கிடைப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் உதவி செய்துள்ளார். 

 

அதன் பிறகு விதவைச் சான்றிதழை பெற்று தருமாறும், விதவை உதவித்தொகை கிடைப்பதற்கும் பரிந்துரை செய்யுமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டுள்ளார். அதை செய்து கொடுப்பதாக உறுதி அளித்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், அந்த பெண்ணின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அடிக்கடி அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய கிராம நிர்வாக அலுவலர், தன்னை வந்து தனியாக சந்திக்குமாறு கூறியுள்ளார். 

 

ஒரு முறை அந்தப் பெண் தனது சகோதரனை தன்னுடன் அழைத்துச் சென்று அந்த கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துள்ளார். அப்போது அவரது சகோதரர், ஏன் தனியாக வந்து சந்திக்க அழைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகும் அந்தப் பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், ‘உனக்கு விதவைச் சான்று, விதவை உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீ உனது சகோதரருடன் வரக்கூடாது. தனியாக வந்து என்னை சந்திக்க வேண்டும். என்னோடு தனிமையில் என்னை சந்தோஷ படுத்த வேண்டும். அதற்கு சம்மதித்தால் உதவித் தொகை பெற்று தருவேன்’ என்று பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

 

கிராம நிர்வாக அலுவலரின் பேச்சை செல்போனில் பதிவு செய்து கொண்ட அந்த பெண், இது குறித்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சாகுல் ஹமீதுக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்திய கோட்டாட்சியர் சாகுல் ஹமீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்