உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
கெளசல்யா என்பவரை காதல் திருமணம் செய்ததற்காக, கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியியல் பட்டதாரி உடுமலையை சேர்ந்த சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல, தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை காலை, இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.