தஞ்சை பெரிய கோயிலை கட்டிய பேரரசன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்களை செய்திருப்பதாக நடிகை ஜோதிகாவை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, பல கருத்துகளை பேசியவர், பேச்சுக்களுக்கு இடையே மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்தும் பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில்," ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜன் தமிழுக்கும், சைவத்துக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அழியாத புகழை தேடி கொடுத்துள்ளார். தஞ்சை பெரிய கோயில் தமிழ் பண்பாட்டின் வெளியீடு. சைவசமயத்தின் திறவுகோல். சைவமும் தமிழும் தனது இரு கண்களாய் ஏற்று இரண்டையும் தன் வாழ்நாள் முழுவதும் ராஜராஜசோழன் வளர்த்ததன் அடையாளமே தஞ்சை பெரிய கோயில். தஞ்சை பெரியகோயிலின் மாண்பை நன்கு உணர்ந்த மத்திய அரசு அந்தக் கோயிலை தனது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
அப்படிபட்ட ராஜராஜனை, தஞ்சை பெரிய கோயிலை கட்டியதற்கு பதிலாக பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டியிருக்கலாம் என நடிகை ஜோதிகா தெரிவித்திருப்பது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தமிழ் பண்பாட்டையும், தமிழ் கலாச்சாரத்தையும் நடிகை ஜோதிகாவிற்கு அவருடைய மாமனார் சிவகுமாரும், அவருடைய கணவர் சூர்யாவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ராஜராஜனை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் அருகதை இல்லை. அதற்கு ஜோதிகாவும் விதிவிலக்கல்ல. ராஜராஜன் மீதும் தஞ்சை பெரியகோவில் மீதும் தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகா உடனடியாக அந்த விமர்சனங்களை வாபஸ் பெற வேண்டும். தவறினால் நடிகை ஜோதிகா தமிழகம் முழுவதும் கடும் சட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும்," என எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சமுக ஆர்வளர் ஒருவர் கூறுகையில்," ஜோதிகா ராஜராஜ சோழனின் தமிழ்பற்று, கலைபற்று, நிர்வாக திறன் தெரிந்திடாமல் பேசியிருக்க முடியாது, ஊருக்கு ஊர் கோயில்களை கட்டிய ராஜராஜன், அதற்கு பதிலாக மருத்துவமனைகளை கட்டியிருந்தால் கரோனா எனும் கொடிய நோய்கள் வரும்போது அது மக்களுக்கு நன்மை பயக்குமே, தற்போது கரோனாவால் கோயில்களே பூட்டப்பட்டுவிட்டதை நினைத்தே பேசியிருப்பார், அவரது பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்கிறார்கள்.
கடந்த ஆண்டு, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜன் குறித்து பேசியது பல சர்ச்சைகளை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.