Skip to main content

இளம் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
555

 

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் ஏழுமலை, வயது 25. பி.இ .பட்டதாரியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து காவலராக பணியாற்றி வந்தார். தற்போது மாவட்ட எஸ்பி குடியிருப்பு முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் டூட்டி முடிந்து அவர் தங்கியுள்ள காகுப்பம் பயிற்சி காவலர் குடியிருப்பில் ஓய்வு எடுக்க சென்றுள்ளார். அதற்கு முன்னதாகவே அங்குள்ள ஆயுதப்படை முகாமில் உள்ள அதிகாரியிடம் அவர் பாதுகாப்புக்கு எடுத்து சென்றிருந்த துப்பாக்கியை ஒப்படைத்து கையெழுத்து இடவேண்டும். ஆனால் அவர் அப்படி ஒப்படைக்காமல் இருந்துள்ளார். 

 

இதற்கிடையே இரவு வெகு நேரமாகியும் ஏழுமலை அலுவலகத்திற்கு வந்து துப்பாக்கியை ஒப்படைத்து ஆஜராகாததால் அங்கிருந்து ஆயுதப்படை அதிகாரிகள் அவரது செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அது சுவிட்ச் ஆஃபில் இருந்து உள்ளது. இதனையடுத்து நேற்று காலை ஏழுமலை தேங்கியுள்ள குடியிருப்பில் ஏழுமலை  இருக்கிறாரா என்று பார்த்து வருமாறு குடியிருப்பில் உள்ள போலீஸ்காரர் தங்கம் என்பவரை அனுப்பி வைத்துள்ளனர்.

 

தங்கம் அங்கு சென்று பார்த்தபோது ஏழுமலை தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்துள்ளது. அவரை எழுப்பி என் அலுவலகத்திற்கு வந்து ஆஜராகவில்லை என்று என்று அதிகாரிகள் கேட்கிறார்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஏழுமலை எனக்கு உடல்நிலை சரியில்லை, மாத்திரை போட்டு உள்ளேன், இதோ சிறிது நேரத்தில் அலுவலகம் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார் ஏழுமலை. 

 

இந்த தகவலை தங்கம் ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார். பிறகு நீண்ட நேரம் சென்ற பிறகு மீண்டும் ஏழுமலை அலுவலகம் வரவில்லை. இதை எடுத்து போலீஸ்காரர் தங்கம் மீண்டும் ஏழுமலை அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அரை கதவு ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த தங்கம் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும் பின்னர் அருகில் உள்ள ஒரு ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்தபோது ஏழுமலை தலையில் இருந்து ரத்தம் ஓடிய நிலையில் ஏழுமலை கிடந்துள்ளார். அவர் அருகில் துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் டிஐஜி எழிலரசன் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு இருவரும் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

 

தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து இறந்துபோன ஏழுமலையின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர்தான் வைத்திருந்த துப்பாக்கியால் தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆயுதப்படை காவலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

போலீஸ்காரர் ஏழுமலை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏழுமலையின் பெற்றோர் அவரது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர் .அப்போது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் மகனை படிக்க வைத்தோம், பி.இ. படித்திருந்தாலும்கூட அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தால் காவல் பணிக்கு சேர்ந்தார். எங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஒருமுறை விபத்தில் சிக்கிய போது பதறிப்போனோம். அதிலிருந்து உயிர் பிழைத்து மீண்டும் வேலைக்கு சென்று வந்த நிலையில் சில மாதங்களாக சந்தோஷமாக இருந்தோம். அந்த சந்தோஷம் பறிபோய் விட்டதே, எங்களுக்கு ஒரே மகன் இவர் என்று கதறி அழுதனர். இளம்வயது காவலர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்