!['udaintha kompu Shankar' Returns- People in Fear!](http://image.nakkheeran.in/cdn/farfuture/hT3p4QE9lStR2x8qt_t7P5w8OvjILTYPCnn44WyvhCY/1612410735/sites/default/files/inline-images/dfhreyey_0.jpg)
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரே வாரத்தில், 3 பேர் 'உடைந்த கொம்பு சங்கர்' என்ற ஒற்றைக் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டனர். தந்தையும் மகனும் உடைந்த கொம்பு சங்கரால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து, அதனைப் பிடிக்க வனத்துறை சார்பில் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தொடர் முயற்சியில் நடந்த தேடுதலில், அந்த யானை மறைந்துள்ள சேரம்பாடி பகுதி சமதளப் பகுதியாக இல்லாமல் மேடு பள்ளங்கள் நிறைந்த புதர்ப் பகுதியாக இருந்ததால், யானை மயக்கமடைந்தாலும் அதனை வாகனத்தில் ஏற்றுவது மிகவும் சவாலான காரியம் எனக் கூறிய வனத்துறையினர், யானை மயக்கமடைய மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சித்தும் முடியாமல் போனது.
அதன்பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற யானையை முதல்முறையாக ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது உடைந்த கொம்பனைச் சுற்றி 10 யானைகள் இருந்தன. உடைந்த கொம்பனைக் கண்காணிக்க கோவை முதுமலையிலிருந்து ட்ரோன் கேமராக்கள் கொண்டுவரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், பிடிக்க முடியாமல் போனது. பின்னர் இறுதியாக யானையைப் பிடிப்பதற்கான வனத்துறையின் திட்டம் நிறுத்தப்பட்டது.
!['udaintha kompu Shankar' Returns- People in Fear!](http://image.nakkheeran.in/cdn/farfuture/m8F3ftTLg_3ohHNVulgwc-t8RlPWYhJ_bpsLHx9TeII/1612410791/sites/default/files/inline-images/tfut575_0.jpg)
இந்நிலையில், கேரள வனப்பகுதிக்கு தப்பிச் சென்ற உடைந்த கொம்பன், ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தற்போது அதே நீலகிரி சேரம்பாடி பகுதிக்கு வந்துள்ளது. மூன்று பேரை கொன்ற யானை மீண்டும் திரும்பியதால் சேரம்பாடி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வந்த உடைந்த கொம்பனைப் பிடித்து தெப்பக்காடு முகாமுக்கு அனுப்ப வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.