திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் செல்ஃபோன், இருசக்கர வாகனம், செயின் பறிப்பு போன்ற வழிப்பறிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் காவல்துறைக்கு அதிக புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் திருட்டு என்பது தொடர் சம்பவமாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு திருட்டு வழக்கில் போலீஸார் புலன் விசாரணை நடத்தியபோது, சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்களைப் பிடித்துவந்து விசாரித்துள்ளனர். அதில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுதாகர், 19 வயதான பிரவீன் ஆகிய இருவரை நகரப் போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் தொடர் வழிப்பறி, திருட்டில் ஈடுப்பட்டதை அறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைதுசெய்து விசாரித்தபோது, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் திருடியது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிபறிக்கு உபயோகப்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் எங்கெங்கு வழிப்பறி செய்தார்கள், எவ்வளவு பொருள் வழிப்பறி செய்யப்பட்டது, அந்தப் பொருட்கள் எங்கே என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், “சுலபமாக பணம் சம்பாதிப்பதற்கான வழி வழிப்பறி, திருட்டு என முடிவு செய்து இதில் இறங்கியுள்ளனர். முதல் வழிப்பறி செய்த பின் மாட்டாததால், தொடர்ந்து வழிப்பறி செய்து வந்துள்ளனர். செல்ஃபோன், நகையை உடனே விற்று அந்தப் பணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர். முதல்முறையே மாட்டவில்லை, இனிமேல் மாட்டமாட்டோம் என நினைத்து தொடர்ச்சியாக திருட்டு வேலையில் ஈடுப்பட்டுள்ளனர். இப்போது சிக்கியுள்ளார்கள். வழிப்பறி மட்டும்மா அல்லது இன்னும் வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரித்து வருகிறோம். கூடவே போலீஸிடம் சிக்கிவிட்டோமே என்கிற பயம் கூட இல்லாமல் ஜாலியாக உள்ளார்கள்” என்றார்கள்.
இளம் வயது பயமறியாது என்பார்கள், பயமேயில்லாமல் இளம் வயதில் திருட்டு, போலீஸ், சிறை என சென்றால் வாழ்க்கையும் முடிந்துவிடும் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.