Skip to main content
Breaking News
Breaking

கருவேப்பிலைக்கு இடையில் வைத்து ஐம்பொன் சிலை கடத்தல்; இருவர் கைது

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Two persons arrested for kidnapping Impon idol in Vellore

 

வேலூர் மாவட்டம், மலைக்கோடி பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சிலர் சிலை கடத்தி விற்க முயல்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல்துறையினர் நேற்று (15.03.2023) இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற காவல்துறையினர் சாத்துமதுரை அருகே மடக்கிப் பிடித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த கட்டைப்பையை சோதனை செய்தபோது அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 

 

அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஐம்பொன்னால் ஆன ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடையும் கொண்ட சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர், சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ் (43), கண்ணன் (42) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

 

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும், அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அரியூர் காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், சிலை எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்