![TVK people struggle toll gate issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/dhiUU8ZpYdbwZSRKW6d0xcQF64cwvCZzMxK-XNm3c0o/1630414240/sites/default/files/inline-images/th-1_1691.jpg)
சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகள் முன்பு அவ்வப்பொழுது போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், லேனா விளக்கு சுங்கச் சாவடியிலிருந்து காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலுவலகம்வரை பொது மக்கள் மத்தியில் பிச்சையெடுத்து சுங்கச்சாவடி ஆணையத்தினருக்கு அளிக்கும் நூதன போராட்டத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட தொகுதி, ஒன்றிய, நகர, தொழிலாளர் சங்கம் என அனைத்து நிர்வாகிகளும் தங்களது கட்சி கொடியேந்தி வழியெங்கும் பிச்சையெடுத்துக் கொண்டே சுங்கச்சாவடிக்குச் சென்றனர்.
![TVK people struggle toll gate issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/rw0YGlgpoUz7aJBHaQA0CdELXbBWVrfxp1SxRYf8FNQ/1630414256/sites/default/files/inline-images/th-2_420.jpg)
அப்போது போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், த.வா.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது பேசும் போது, “சுங்கச்சாவடியில் கழிவறை இல்லை, சாலைகள் சரிவர இல்லை, 4 சுங்கச்சாவடிகளில் 3 சாவடிகள் இரண்டு வழிச்சாலை, பேருந்து கட்டணம் 40 ரூபாய் இருக்கையில் சுங்கக் கட்டணம் 90 ரூபாயா? Fast tag முறையில் மேலும் நூதன கொள்ளையடிக்கிறார்கள். 100 கிலோ மீட்டருக்குள் 4 சுங்கச்சாவடி வைத்து கட்டண வசூல் செய்கிறார்கள். இது பற்றி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்டால் எங்களைத் தாக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இந்தப் போராட்டம்” என்றார்.