Skip to main content

த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

 

TvK Leader Vijay gets enthusiastic welcome from volunteers

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். மேலும் பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.

இந்நிலையில் த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) காலை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், பிரச்சார சுற்றுப்பயணம், தேர்தலில் கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வானது மதியம் 01:30 மணி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க சுமார் 2500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள், அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பேர் என்ற அளவில் சுமார் 2500 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், “வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு  கெட் அவுட் (#GetOut)” என விழா நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு பேனரில், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை திணிப்பிற்கு எதிராகப் போராட உறுதியேற்போம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் த.வெ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து ஆண்டு விழா நடைபெறும் ஓட்டலுக்கு காரில் வருகை தந்தார். அப்போது அங்கு அவருக்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விழாவில் பங்கேற்க விஜய் புறப்பட இருந்த நிலையில் அவர் வீட்டில் காலணி வீசப்பட்டது.  இந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் வீட்டில் காலணி வீசியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அங்கு இருந்தவர்கள் கூறினர். இதனையடுத்து விஜய் வீட்டில் காலணியைத் தூக்கி வீசிய இளைஞரை காவல்துறையினர் விசாரணைக்காக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

சார்ந்த செய்திகள்