அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு எதிராகவும் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவரிடம் செய்யக்கூடிய விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் படியாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் உயர் நீதிமன்றம் முதலில் முடிவெடுக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்த பின்னர் இந்த வழக்கில் இது குறித்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் இன்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதையடுத்து அமலாக்கத்துறையால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் தினமும் ஆதாரங்கள் கடுமையாக அழிக்கப்படுகின்றன. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதால் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் விசாரணையைத் தொடர முடியவில்லை” என்ற வாதங்களை முன்வைத்தார்.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞராக கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். மூன்றாவது நீதிபதியின் முடிவுக்காக வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அடங்கிய அமர்வை அமையுங்கள். வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 24 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.