Skip to main content

மதுபோதையில் லாரி கடத்தல்; அதிரடியாக செயல்பட்ட போலீசார்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

viluppuram district parcel lorry incident 

 

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பார்சல்களை ஏற்றி செல்லும் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் சரவணன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு உடல் அசதி காரணமாக ஓட்டுநர் சரவணன் லாரியின் அருகில் உறங்கி எழுந்தவர், லாரியின் சாவியை லாரியிலேயே வைத்துவிட்டு டிபன் சாப்பிடச் சென்றுள்ளார்.

 

அப்போது திடீரென ஒருவர் பார்சல் லாரியை கடத்திக்கொண்டு சென்றுள்ளார். டிபன் சாப்பிட்டு விட்டு வந்து லாரியை காணாமல் அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது பார்சல் லாரி குறித்து எதிரே வந்த வாகன ஓட்டிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பார்சல் லாரி விழுப்புரம் பக்கம் செல்வதாக கூறியுள்ளனர். உடனே அச்சரப்பாக்கம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக ஓங்கூர் சுங்கச்சாவடிக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பார்சல் லாரியை மடக்கி பிடிக்க  முயன்ற போது சுங்கச்சாவடியின்  தடுப்பு கேட்டை உடைத்துக் கொண்டு மிக அதிவேகமாக பார்சல் லாரி சென்றது. இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

போலீசார் பார்சல் லாரியை துரத்தி சென்று திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியை கடத்தி வந்த நபர் தப்பிக்க முயற்சி செய்தபோது அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அந்த நபரை திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை செய்ததில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்குபள்ளிகுளம் பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 36) என்பதும், மதுபோதையில் வாகனத்தை கடத்திச் சென்றதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட பார்சல் லாரி ஓட்டுநர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்