ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. தன்னை முதல்வராக்கவில்லை என்றதும் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார். சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் தினகரன் கைதானதும், எடப்பாடி பழனிசாமி சசிகலா அணியினரை கழட்டிவிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன.
இதையடுத்து முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னமும், கட்சி பெயரும் அந்த அணிக்கே திரும்ப கிடைத்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டன. புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
கட்சி நிர்வாகிகளை நியமித்தல், முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, அவசர நேரத்தில் கட்சியின் சார்பில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் 2 பேருமே விளங்குகின்றனர். இதற்கிடையே அ.தி.மு.க. வின் பொதுக்குழுவில் எடுக் கப்பட்ட முடிவுகளும், புதிய சட்ட விதிகளும் தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளுக்கும், புதிய விதிகளுக்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
அ.தி.மு.க.வின் சட்டவிதியில் மாற்றம் செய்ததற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,
உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் பொதுக்குழு செல்லுமா? செல்லாதா என்பது நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகுதான் தெரியவரும். பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவில்லை. நீதிமன்றம்தான் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அடிப்படை உறுப்பினர்களால் தான் இந்த கட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்ற பொதுச்செயலாளர்தான் இந்த கட்சியில் அதிகாரமிக்கவர். அந்த அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் தவறு செய்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் அறிவித்தது தவறு. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஜூலை மாதம் வருகிறது. அப்போது அதனை குறிப்பிட்டு வாதாடுவோம். தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது சட்டப்படி தவறு. எங்கள் வழக்கறிஞர்கள் கபில்சிபில், டாக்டர் சிங்வி மற்றுள்ள எங்களது வழக்கங்கள் அந்த வாதத்தை எடுத்து வைப்பார்கள். தேர்தல் ஆணையம் திடீரென்று அறிவிப்பு கொடுத்தது தவறு. வருங்காலத்தல் உண்மை தெரியவரும். இவ்வாறு கூறினார்.