சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று வங்கியின் மண்டல இயக்குநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி ஊழியர்களைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.