Skip to main content

மாணவனின் உயிரை பறித்த கல்விக் கட்டணம்..! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Tuition fees that took the life of a student ..!

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ஆண்டிபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் 20 வயது விஷ்ணு. இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி  ஒன்றில் இறுதியாண்டு பி.இ. சிவில் பொறியாளர் பட்டம் படித்து வருகிறார். இவருக்குக் கல்லூரியிலிருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஷ்ணு தனது பெற்றோரிடம் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்குத் தகவல் வந்துள்ளது குறித்துத் தெரிவித்துள்ளார். 

 

அப்போது அவரது பெற்றோர்கள் தற்போது கையில் பணம் இல்லை பிறகு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதனால் விஷ்ணு, கல்விக்கட்டணம் செலுத்த உடனடியாக பணம் தரவில்லையே என்று மனவேதனையிலிருந்து வந்துள்ளார். விஷ்ணுவுக்குக் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தைப் பெற்றோர் ஏற்பாடு செய்து தருவதற்குள் மனமுடைந்த விஷ்ணு, கடந்த 14ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். 

 

தகவல் அறிந்த அவரின் பெற்றோர் கதறித் துடித்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிதம்பரத்திலுள்ள ராஜா அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், புதுச்சேரிக்குச் செல்லும் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து சோழதரம் போலீஸார் விரைந்து வந்து விஷ்ணு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அங்குப் பிரேதப் பரிசோதனை முடிந்த விஷ்ணுவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷ்ணு தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் சோழதரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசாஸார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவின் மரணத்திற்குக் கல்லூரி கல்விக் கட்டணம் கட்டுவது காரணமா வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்