Skip to main content

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில், திருச்சி இரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் புதிய கட்டுமானப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ராணுவத்திற்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20 விழுக்காடு பணிகள் தடைப்பட்டு போனது. அப்பணிகள் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அணுகு சாலை, இன்று போக்குவரத்து பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.என். நேரு கொடியசைக்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தைக் கடந்து சென்றனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக நிறைவடைந்துள்ளது. முதல்கட்டமாக, அம்பேத்கர் ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை,  மத்திய பேருந்து நிலையம், இரயில்வே சந்திப்பு மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, 80% பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

 

இந்நிலையில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைக் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால்,  இந்த பகுதியில் அணுகுசாலை அமைக்க முடியாமல் இருந்தது. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைகளுக்கு பின்னர் ராணுவத் துறைக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பான 8.45 கோடி ரூபாய்க்கு, சம மதிப்பிலான உள்கட்டமைப்பை நெடுஞ்சாலைத் துறையினர் ராணுவத்தினருக்கு அமைத்துத் தருவது எனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ராணுவத்துக்குச் சொந்தமான 0.66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் அதில் அணுகு சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கடந்த 14.05.2022 அன்று 3.53 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். மேம்பாலத்தில் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை,  ராணுவத்தின் நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர்,  சேவை சாலை, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற கட்டுமான பணிகள் தற்சமயம் முடிவுற்றது. பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சாலை பாதுகாப்பு சிக்னல்கள் அமைக்கப்பட்டு நிறைவுற்ற இப்பாலத்தை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்தார். பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்