புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள வசந்தனூர் கண்மாயில் கடந்த மாதம் 12- ஆம் தேதி காலை போர் விமானம் ஒன்று திடீரென விழுந்து எர்ந்து கொண்டிருப்பதாக காட்டுத் தீ போல தகவல் மற்றும் படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் அந்தப் பகுதியில் சூப்பர் சோனிக் விமானம் வந்து சென்ற பிறகு கண்மாயில் இருந்த கருவேல மரங்கள், புல், செடிகள் எரிந்தது. விமானம் விழவில்லை. விபத்தும் இல்லை என்பதை அந்த கண்மாயில் நின்ற நம் வாசகர்கள் மூலம் அறிந்து நக்கீரன் இணையத்தில் அழுத்தமாக சொன்னோம்.
அதன் பிறகு அதிகாரிகள் சென்று விமான விபத்து இல்லை. கண்மாயில் கருவேல மரங்களும், புல், செடிகளும் எரிந்துள்ளது. அதனை யாரோ விமான விபத்து என்று வதந்தி பரப்பிவிட்டனர் என்றனர். வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் அறிவித்தார்.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அநத புகாரில்.. மேல வசந்தனூர் கண்மாயி்ல் விமானம் விழுந்து எரிந்ததாக படங்களுடன் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தான் விமானம் விழுந்து எரியவில்லை என்றால் கண்மாயில் பல இடங்களில் திட்டுத் திட்டாக எரிந்தது எப்படி? என்ற சந்தேகத்தை போக்க தடய அறிவியல் துறையின் சார்பில் எரிந்த இடங்களில் ஆய்வு செய்து சாம்பல்களை சேகரித்துச் சென்றனர். அந்த சோதனையில் தீ பற்றியது எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதால் மாதிரிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சோதனை முடிவுகள் வெளியிடவில்லை. அதனால் எப்படி தீ பற்றியது என்பது பற்றி தெரியவில்லை. இந்த ஆய்வு முடிவு வெளியானால் மட்டுமே அந்த பரபரபான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எப்போது முடிவுகள் வெளியாகும்?