உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று (14.02.2020) மதியம் நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதனிடம் தஞ்சை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீனியர் வழக்கறிஞர் கணபதி என்பவர் மூலம் எட்வின் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, இதை ஏன் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவில்லை என எச்சரித்துவிட்டு வில்லங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்த வங்கி அதிகாரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும் 24 மணி நேரத்துக்குள் எட்வின் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அப்படி என்ன இருக்கிறது என்று அந்த இளம்பெண்ணிடம் நாம் பேசியபோது, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார். கல்யாணம் ஆன அடுத்த நாளில் இருந்து வீட்டுக்கு லேட்டாக நள்ளிரவில் வருவதும், வந்தவுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்த போது அவருடைய நிர்வாண படங்களும் பெண்களிடம் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
நான் அவரிடம் கேட்ட போது நான் இப்படித்தான் இருப்பேன். அவர்களெல்லாம் என்னுடைய தோழிகள் என்றும் நான் என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் நீயும் நானும் இருப்பது போன்ற படங்கள் எடுத்திருக்கிறேன். அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால் பயந்து போனேன்.
அவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிலிருந்த பீரோவில் 15- க்கும் மேற்பட்ட செல்போன்கள் வைத்திருந்ததும், அதில் அவர் எடுத்திருந்த புகைப்படங்களில் வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக படமெடுத்து இருப்பதும், அந்த ஏரியா பகுதி பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து இருப்பதை பார்த்து இன்னும் பயந்து போனேன்.
திருமணத்திற்காக எட்வீன் ஜெயக்குமாரின் அம்மா லில்லி, அவருடைய சகோதரி கேத்ரீன், அவர்கள் சொன்னதற்கு இணங்க வரதட்சணையாக 25 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும், 6 லட்சத்திற்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினர். ஆனால் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே என் பையன் வங்கியில் வேலை பார்க்கிறார். இந்த பணம் பத்தாது இன்னும் 50 பவுன் நகை வேண்டும் என்று டார்ச்சர் செய்தனர்.
ஒரு பக்கம் கல்யாணமான கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணை கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரை அம்மா பார்த்து சொல்ல முடியாமல் ஒரு மாதம் அவர்களிடம் நரக வேதனையை அனுபவித்தேன்.
இரண்டு முறை யாருமில்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது இனி இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று உயிருக்கு பயந்து தப்பித்து என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். அம்மா அப்பாவுடன் தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர்கள் மீது 498a,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு பயந்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்" என்றார்.
வங்கியில் பணிபுரியும் அதிகாரியின் இந்த வில்லங்க செயல் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.